உள்நாட்டு செய்தி
ஜனாதிபதி, அரசாங்கம் மீதான நம்பிக்கையை பிரதம தேரர்கள் இழந்துவிட்டனர்: ஹிருணிகா
மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை இழந்து விட்டதால், தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுவது குறித்து சந்தேகம் எழுப்ப ஆரம்பித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
பிரேமச்சந்திர நேற்று கண்டியில் முதன்முதலாக பெண்கள் உச்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்து ஆசிர்வாதம் பெறுவதற்காக மாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளார்.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஹிருணிகா, ஜனாதிபதி தேர்தலை அரசாங்கம் நடத்துமா இல்லையா என்பதில் பீடாதிபதிகளுக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்தார்.
“சில நேரங்களில் அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தப் போவதாகச் சொல்கிறது, சில சமயங்களில்
பாராளுமன்றத் தேர்தல் பற்றிப் பேசுகிறது, சில சமயங்களில் வாக்கெடுப்பு நடத்தப் போகிறோம் என சொல்கிறது,”
“பிரதம தேரர்களுக்கு ஜனாதிபதி மீதோ, அரசாங்கத்தின் மீதோ அல்லது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடைமுறைகள் மீதோ நம்பிக்கை இல்லை என்பது தெளிவாகின்றது. இது மிகவும் நெருக்கடியான நிலையாகும். ஜனாதிபதி உட்பட இந்நாட்டில் எவரும் பெறக்கூடிய உயரிய ஆசி தலைமை பீடாதிபதிகள், நாட்டின் மீதும், தலைவர்கள் மீதும் ஏமாற்றம் அடைந்தால், அது ஒரு நெருக்கடியான சூழ்நிலையாகும்,” என்றார்.
“அரசாங்கத்திற்கோ அல்லது நாட்டிலுள்ள எந்தவொரு தலைவர்களுக்கோ அந்த ஆசீர்வாதங்களைப் பெற முடியாது என நான் நினைக்கின்றேன்,” என ஹிருணிகா மேலும் தெரிவித்துள்ளார்.