உள்நாட்டு செய்தி
மின் கட்டண குறைப்பு தொடர்பான பிரேரணை மீளாய்வு !
மின்சார கட்டணக் குறைப்பு தொடர்பான பிரேரணையை மீளாய்வு செய்து சமர்ப்பிக்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட பிரேரணையை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவிடம் கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இடம்பெற்ற மக்கள் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கையின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, சுமார் 40 பேர் தமது யோசனைகளை சமர்ப்பித்த நிலையில், இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்ட கட்டணக் குறைப்பு வீதத்தை விடவும் அதிக வீதத்தில் கட்டணக் குறைப்பை மேற்கொள்ள வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த விடயங்கள் அனைத்தையும் பரிசீலித்து, மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனையை மீள்பரிசீலனை செய்து திருத்தம் செய்ய வேண்டுமென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, தற்போதைய மின்சார கட்டணத்தை 20 முதல் 25 வீதம் வரை குறைக்க முடியும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் மற்றும் இலங்கை மின்சார சபையின் அண்மைய நிதிநிலை அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையிலான மீளாய்வின் பிரகாரம் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, மின் கட்டணத்தை அடுத்த மாதத்திற்கு முன்னதாக திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.