முக்கிய செய்தி
ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு!
2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் கொடுப்பனவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் 1,000 ரூபாவினால் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
மாணவ, மாணவிகளின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
பொருளாதாரச் சிரமங்களுள்ள மாணவர்களை இனங்கண்டு அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி நிதியம் இந்த புலமைப்பரிசில் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.
2021/2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ், ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டதுடன் இதுவரை 10 மாதாந்த தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன. இதன்படி, புலமைப்பரிசில் தொகை அதிகரிப்புடன், எதிர்வரும் பெப்ரவரி முதல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து 6,000 ரூபா மாதாந்த உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும் 2022/2023 ஆண்டு தொடர்பாக க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் தேர்ச்சி பெற்ற 5,000 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அந்த மாணவர் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் வரை மாதாந்தம் ரூ. 6000 தொகையை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன்படி, இலங்கையின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் தற்போது பிராந்திய மட்டத்தில் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தெரிவுகள் நிறைவடைந்தவுடன் உரிய மாணவ மாணவிகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.