முக்கிய செய்தி
கொத்துரொட்டியை உட்கொண்டுவிட்டு உறங்கிய 3 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு..!
இரவு நேர உணவாக கொத்துரொட்டியை உட்கொண்டுவிட்டு உறங்கிய 3 பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ஹொரணை பிரதேசத்தை 33 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயாவார்.
உயிரிழந்தவரின் உடல் எடை கடந்த 3 வருடங்களாக அதிகரித்து வந்த நிலையில் இவர் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்ததினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இறந்தவருக்கு நித்திரைக்கு செல்வதற்கு முன்னர் ஒட்சிசன் வாயு இயந்திரத்தை பயன்படுத்துமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இவர் கடந்த 14 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் தனது கணவருடன் வெளியில் சென்று கொத்து ரொட்டியை உணவாக உட்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து வீட்டிற்கு வந்த பெண் அவரது ஒட்சிசன் வாயு இயந்திரத்தை பொருந்தி விட்டு உறங்கியுள்ள போது தூக்கத்தில் அதனை கழற்றிவிட்டுள்ளார்.
இந்நிலையில், அதிகாலை 4 மணியளவில் தனது மனைவியை அவதானித்த கணவர், அவர் தூக்கத்திலிருந்து விழிக்காததால், ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
குறித்த பெண், அதிக உடல் எடையினால் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ஒட்சிசன் வாயு குறைந்தமையால் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டு உயிரிழந்துள்ளதாக திடீர் மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.