உள்நாட்டு செய்தி
மாத்தறை சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சல்: மேலும் ஒரு கைதி மரணம்
மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக்காய்ச்சலுக்கான அறிகுறிகளால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் (31) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வலஸ்முல்ல பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய நபரே அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது மாத்தறை சிறைச்சாலையில் பதிவான இரண்டாவது மூளைக்காய்ச்சல் தொடர்பான மரணமாகும்.
மாத்தறை சிறைச்சாலையில் அண்மையில் 17 கைதிகள் சுகவீனமடைந்துள்ளதாகவும் அவர்களில் ஒருவர் மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சிறைச்சாலையில் கடுமையான சுகாதார நடவடிக்கைகளை அமுல்படுத்த சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.