உள்நாட்டு செய்தி
யாழ்.பல்கலைக்கழக இளங்கலை மாணவி மரணம் தொடர்பில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு
டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்ததாகக் கூறப்படும் யாழ்.பல்கலைக்கழக இளங்கலை மாணவி, உயிரிழந்தமை தொடர்பில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளது.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் முதலில் அனுமதிக்கப்பட்ட மாணவி டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்ததாக உயிரிழந்தவரின் உறவினர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். .
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், அவருக்கு வழங்கப்பட்ட மருந்து ஒவ்வாமை காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கத் தக்க தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் டெங்கு நோயாளர் ஒருவருக்கு மருந்து வழங்காத காரணத்தினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக மாணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் முறையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு மாணவியின் உறவினர்கள் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.