உள்நாட்டு செய்தி
டெங்கு காய்ச்சலால் 11 மாத குழந்தை உயிரிழப்பு…!
யாழில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 11 மாத ஆண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் திங்கட்கிழமை (25) உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் தாவடி பகுதியை சேர்ந்த குழந்தை காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த சனிக்கிழமை யாழ்,பல்கலைக்கழக மாணவி ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளை வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்து ஒவ்வாமை ஏற்பட்டதன் காரணமாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (24) உயிரிழந்திருந்தார்.
இதேவேளை, 25 வயதான இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவும் நிலையில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார தரப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வருவதால் யாழ்.போதனா வைத்தியசாலையில் டெங்கு தொடர்பான புதிதாக இரண்டு நோயாளர் விடுதி திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.