உள்நாட்டு செய்தி
3 மாதங்களாக காணாமல் போயிருந்த, இரு மாணவிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்…!
மூன்று மாதங்களாக காணாமல் போயிருந்த குருணாகல் கலகெதர மற்றும் மாவத்தகம பகுதிகளைச் சேர்ந்த இரு மாணவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று திங்கட்கிழமை (25) காலை மாத்தறை உயன்வத்தையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஒக்டேபர் மாதம் முதலாம் திகதி 18 மற்றும் 19 வயதுடைய குறித்த இரண்டு மாணவிகளும் மேலதிக வகுப்புக்கு செல்வதாகக் கூறி வீடுகளிலிருந்து வெளியேறியதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் சென்றவர்கள் அன்றைய தினம் வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தனர்.
அதற்கமைய பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் மாத்தறை, உயன்வத்தை பகுதியில் தங்கும் விடுதியில் இருந்து பணிபுரியும் கடையொன்றிற்குச் சென்றுகொண்டிருந்த இரு மாணவிகளும் இன்றைய தினம் காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவத்தகம மற்றும் கலகெதர பொலிஸ் நிலையத்தினூடாக இரண்டு மாணவிகளும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.