உள்நாட்டு செய்தி
வவுனியா இரட்டை கொலைச் சம்பவம் – சந்தேகநபர் கைது !
வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செட்டிக்குளம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடந்த 30ஆம் திகதி ஆண் ஒருவரும் அவரது மனைவியும் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர். 72 வயதான ஆண் ஒருவரும் 68 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு கொலை செய்யப்பட்டனர். அத்துடன் அவர்களது தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் இதன்போது கொள்ளையிடப்பட்டிருந்தன.
இந்தநிலையில், குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த சந்தேகநபர் தாம் அணிந்திருந்த ஆடை மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள் என்பவற்றை பை ஒன்றில் இட்டு கிணற்றில் வீசியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.