Connect with us

முக்கிய செய்தி

கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறைவு

Published

on

ஆறு மாதங்களுக்கு முன்னர் தற்செயலாக வெளிவந்த கொக்குத்தொடுவாய் பாரிய மனித புதைகுழி மேலும் விரிவடைந்து செவல்வதாக தெரியவந்ததையடுத்து அகழ்வுப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் நிறுத்தப்படும் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் முதலாம் முதல் மீண்டும் ஆரம்பமாகுமென, நவம்பர் 29ஆம் திகதியான இன்று முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், சடலங்களை அகழ்ந்து எடுக்கும் பணிக்கு பொறுப்பான முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ பிரதேச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

“புதைகுழியானது கொக்கிளாய்-முல்லைத்தீவு நெடுஞ்சாலையில் 1.7 மீற்றர் நீளத்திற்கு நெடுஞ்சாலையை நோக்கி விரிவடைந்துள்ளமை ஸ்கேன் பரிசோதனை ஊடாக தெரியவந்துள்ளது. இதுத் தொடர்பிலேயே இன்று கலந்துரையாடப்பட்டது. இந்த புதைகுழி முற்று முழுதாக ஆராயப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே அனைவரும் உள்ளனர். எனவே எதிர்வரும் வருடம் மார்ச் முதலாம் திகதி தொடக்கம் ஒரு மாத காலத்திற்கு அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளன.”

அகழ்வு நடவடிக்கைகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதற்காக நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் வைத்தியர் வெளிப்படுத்தினார்.

“இந்த அகழ்வுப் பணிகளை இலகுப்படுத்துவதற்கும், ஒழுங்குப்படுத்துவதற்கும் ஒரு அதிகாரி நியமிக்கப்படவுள்ளார். இதற்கான உத்தரவை நீதவான அரசாங்க அதிபருக்கு வழங்கியுள்ளார். பகுப்பாய்வு டிசம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. ”

இரண்டாம் கட்ட புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று ஒன்பதாவது நாளாக மேற்கொள்ளப்படுவதோடு இத்துடன் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளன. நவம்பர் 28 ஆம் திகதி வரை கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து குறைந்தது 39 பேரின் எலும்புகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் சில ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

தற்போது 14 அடி நீளமும் 4 அடி அகலமும் கொண்ட பகுதியில் அகழ்வுப் பணிகள் இடம்பெறுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் நேற்று வெளிப்படுத்தியிருந்தார்.

கொக்குத்தொடுவாய் பாரிய புதைகுழியின் அளவை தீர்மானிப்பதற்காக கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்களாக ரேடார் கருவிகள் மூலம் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று அதன் முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து முல்லைத்தீவு நீதவான் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ, தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட செயலக அதிகாரிகள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டும் வேளையில் ஜூன் 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டன.