உள்நாட்டு செய்தி
காதல் விவகாரம் – இளம்பெண் படு கொலை..!கிளிநொச்சி நீதிமன்றில் முதல் மரண தண்டனை..!
கிளிநொச்சி – பிரமந்தனாறு பகுதியில் இளம்பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
09 வருடங்களின் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி A.M.A.சகாப்தீன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி விஸ்வமடுவில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட நிலையில், கிணற்றிலிருந்து மீட்கப்பட்டார்.
இந்த கொலை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, மோப்ப நாயின் உதவியுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
காதல் விவகாரத்தினாலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளது.
ஒரு பிள்ளையின் தந்தையான 33 வயதான சந்தேகநபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால், குற்றவாளியின் இறுதிக் கருத்தையும் கேட்டறிந்ததன் பின்னர், மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அனைவரும் எழுந்து நின்றதுடன், மன்றின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன.
கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட முதலாவது மரண தண்டனை தீர்ப்பு இதுவாகும்.