உள்நாட்டு செய்தி
இருவேறு இடங்களில் ஒரே நாளில் இரு கொலை சம்பவம் பதிவு…..!
இன்று காலை 06 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இரு பிரேதேசங்களில் இரண்டு கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.படல்கும்புர பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய நபரொருவரே நேற்று இரவு கூரிய பொருளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.முச்சக்கரவண்டி சாரதியான இவர் குடும்ப தகராறு காரணமாக மற்றுமொரு நபரால் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.21 வயதுடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், படல்கும்புர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை, கிரிந்திவெல, உருபொல பிரதேசத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த பெண் தனது குழந்தை மற்றும் பெற்றோருடன் வசிப்பதாகவும், அவரது கணவர் வெளிநாட்டில் தொழில் செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.வீட்டில் தனியாக இருந்த வேளையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் சந்தேகநபர் அடையாளம் காணப்படவில்லை. கிரிந்திவெல பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.