உலகம்
22 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்திய இராணுவ வீரர் சடலமாக மீட்பு- தற்கொலை செய்து கொண்டதாக தகவல்
அமெரிக்காவின் மைனே மாகாணம் லூயிஸ்டன் நகரில் கடந்த 25 ஆம் திகதி ரொபர்ட் கார்ட் என்பவர் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.விளையாட்டு விடுதி, ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 22 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.முன்னாள் இராணுவ வீரரான ரொபர்ட் கார்ட் தப்பி ஓடிவிட்டார்.
அவரை பொலிஸார் தீவிரமாக தேடி வந்தனர். அவரது வீட்டை சுற்றி வளைத்து தேடினர். ஆனால் அங்கு அவர் இல்லை. இதையடுத்து லூயிஸ்டன் நகர் முழுவதும் பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.ரொபர்ட் கார்டிடம் துப்பாக்கி இருப்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறும், வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியும் பொலிஸார் அறிவுறுத்தினர். கடந்த 2 நாட்களாக பொலிஸார் தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் ரொபர்ட் கார்ட் பிணமாக மீட்கப்பட் டார்.அவரது உடலில் துப்பாக்கி குண்டு காயம் இருந்தது. ரொபர்ட் கார்ட் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லூயிஸ்டனின் தென்கிழக்கே உள்ள லிஸ்பன் நீர்வீழ்ச்சி அருகே மரங்கள் நிறைந்த பகுதியில் ரொபர்ட் கார்ட் உடல் கண்டெடுக்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.இதனால் லூயிஸ்டன் நகரில் 2 நாட்களாக நிலவி வந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.