உள்நாட்டு செய்தி
கொழும்பில் பதற்றம்! பலர் கைது – பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குவிப்பு
கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு – விஹாரமகா தேவி பூங்காவிற்குள் நுழைந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்க்ள மற்றும் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த தலைவர்கள் உள்ளிட்டவர்களை கைது செய்வதாக களத்தில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், குறித்த ஆர்ப்பாட்டமானது தனியார் கல்வி நிறுவனங்களான லைசியம், தேசிய வணிக முகாமைத்துவக் கல்லூரி போன்றவற்றுடன் இணைந்து சதி செய்து நாட்டின் இலவசக் கல்வியை அழிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி மருத்துவ பீட மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, திடீரென பூங்காவிற்குள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் உள் நுழைந்ததால் அங்கிருந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். குறித்த பகுதியில் பதற்றமான சூழல் காணப்படுகின்றது. முதலாம் இணைப்பு கொழும்பில் மருத்துவ பீட மாணவர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் போது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று மாலை குறித்த போராட்டம்ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பு – விஹாரமகாதேவி பூங்காவிற்கு முன்பாக ஒன்று திரண்ட மருத்துவ பீட மாணவர்கள் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது போராட்டம் தீவிரமடைந்த நிலையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மேலும், போராட்ட களத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.