Connect with us

முக்கிய செய்தி

தெற்கு, தென்கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவுடனான வர்த்தக உறவுகள் விரிவாக்கம்

Published

on

அமைச்சரவை அனுமதியுடன் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிறுவப்பட்டிருக்கும் சர்வதே வர்த்தக அலுவல்கள் பணியகத்தினால் வெளிநாடுகளுடனான வர்த்தக பொருளாதார ஒப்பந்தங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.தேசிய வர்த்தக பேச்சுவார்த்தைக் குழுவான NTNC இன் வழிநடத்தலுடன் நிதி அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகளுக்கான திணைக்களம், வணிக திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் முதலீட்டுச் சபை உள்ளிட்ட நிறுவன சிரேஷ்ட அதிகாரிகள் இந்த தேசிய வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கான குழுவில் அங்கத்துவம் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.உரிய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய 11 உப குழுக்கள் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் ஊடாக பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தேசிய வர்த்தக பேச்சுவார்த்தை குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறது.அரசாங்கத்தின் 2048 ஆம் ஆண்டில் அபிவிருத்தி அடைந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான ஆரம்பமாக மேற்படி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதற்கமைய பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் உள்நாட்டு பொருளாதாரத்தைப் பலப்படுத்தும்போது, விநியோக கொள்ளளவைப் பலப்படுத்துவது, சந்தை பிரவேசம் ஆகிய விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கையின் சம்பிரதாயபூர்வமான மிகப்பெரிய இறக்குமதியாளர்களாக அமெரிக்கா, ஐக்கிய இராஜ்ஜியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடனான தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்ளும் அதேநேரம் தெற்கு, தென்கிழக்கு, மேற்கு ஆசியாவுடனான ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களை விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது.அதேபோல் இலங்கையின் பொருட்கள் வியாபாரம் தொடர்பில் கவனம் செலுத்தி, இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தமான (ISLFTA) பாகிஸ்தான் – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தமான (PSFTA) ஆகியவற்றை கைசாத்திட எதிர்பார்க்கப்படுகிறது.தெற்காசியாவின் சுதந்திர வர்த்தக வலயம் (SAFTA) மற்றும் வலயத்தின் ஒத்துழைப்புக்கான தெற்காசியச் சங்கம் (SAARC) ஆகியவற்றுடனான ஏற்றுமதியை இலக்குவைத்த வரத்தக ஒப்பந்தங்கள் ஊடாக, இலங்கை தெற்காசியாவின் வர்த்தக சந்தைக்குள் பிரவேசித்துள்ளது.அதேபோல் தற்போது, பங்களாதேஷ் உடனான பொருட்கள் வர்த்தகம் தொடர்பான ஏற்றுமதியை இலக்குவைத்த வர்த்தக ஒப்பந்தங்களைக் கைசாத்திட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட அந்த பேச்சுக்கள் தற்போது வரை மூன்று சுற்றுகளாக மேற்கொள்ளப்ட்டுள்ளன. இலங்கை மற்றும் பங்களாதேஷிடத்தில் முன்னேற்றகரமான வர்த்தக நிலைமைகள் காணப்படுவதால் , தற்போதுள்ள ஒப்பந்தங்களுக்கு மாறான இருதரப்பு வர்த்தகத்தை முன்னேற்றிச் செல்வதற்கான ஒப்பந்தமாக இது அமைந்திருக்கும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையில் கைசாத்திடப்படவுள்ள உத்தேச பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தமான (ETCA) தொடர்பிலான 12 ஆவது சுற்றுப் பேச்சு எதிர்வரும் மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. தற்போது காணப்படும் இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு (ISLFTA) மேலதிகமான விடயங்கள் மேற்கூறிய ஒப்பந்தத்தில் உள்ளடக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.சுதந்திர ஒப்பந்தங்கள் வாயிலாக இலங்கை – ஆசியான் (ASEAN) நாடுகளுக்கிடையிலான தொடர்பும் வலுவடைகிறது. 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாத்தில் சிங்கப்பூருடன் நீடிக்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (Sri Lanka Singapore Free Trade Agreement-SLSFTA) கைசாத்திடப்பட்டதோடு, 2018 மே மாதத்தில் அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. அதேபோல் தாய்லாந்து மற்றும் இந்தோநேசியா போன்ற (ASEAN) நாடுகளுடனும் இலங்கை சுநந்திர வர்த்தக ஒப்பந்ங்களைக் கைசாத்திடுவதற்கான பேச்சுக்கள் ஆரம்பமாகியுள்ளன.தாய்லாந்துடனான மூன்றாம் சுற்றுப் பேச்சுக்கள் இவ்வருடத்தின் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்டதோடு, 7ஆம் சுற்றுப் பேச்சு கடந்த வாரத்தில் கொழும்பில் நடைபெற்றது. அந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், பொருட்கள், நடைமுறைச் சட்டங்கள், சுகாதார பாதுகாப்பு மற்றும் மூலிகை பாதுகாப்பு நடவடிக்கைகள் (SPS), வர்த்தக தடைகளுக்கான தீர்வுகள், வர்த்தகத் தீர்வுகள், சேவை, முதலீடு, முரண்பாடுகளைத் தீர்த்தல், அறிவுசார் சொத்துரிமை, சுங்கச் செயன்முறைகள் மற்றும் வர்த்தக வசதிகள், பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கியுள்ளன.தாய்லாந்துடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக ஏற்றுமதியை இலக்குவைத்த தொழிற்சாலைகளுக்கான நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும், முன்னுரிமை அளிக்கப்பட்ட பொருளாதார ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்திக்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது.அதுமட்டுமின்றி சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலும் ஆறு சுற்று பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன. அறியப்பட்ட சில இலங்கை உற்பத்திகளுக்காக சீன சந்தை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளவும், சீனாவின் வர்த்தக சந்தைக்குள் பிரவேசிக்கவும், உலகின் பெறுமதிமிக்க அமைப்புக்களுடன் பாதுகாப்பான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் இலங்கை தீர்மானித்துள்ளது.உலகின் பெரிய வர்த்தக ஒப்பந்தமாக கருதப்படும் FTA எனப்படும் “வலயத்தின் நீடிக்கப்பட்ட பொருளாதார கூட்டமைப்பு (RCEP)” ஒப்பந்தத்துடன் இணைந்துகொள்வதோடு ஓசியானியா மற்றும் கிழக்காசியாவுடன் படிப்படியான வர்த்தகக் கூட்டுச் செயற்பாடுகளை முன்னெடுக்கவும் இலங்கை ஆசியாவுடன் இணங்கிச் செயற்படுகிறது. “வலயத்தின் நீடிக்கப்பட்ட பொருளாதார கூட்டமைபு (RCEP)” இணைவதற்கான அபிப்பிராய பத்திரத்தை இலங்கை சமர்பித்துள்ளது.அமைச்சரவை அனுமதியுடன் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிறுவப்பட்டிருக்கும் சர்வதே வர்த்தக அலுவல்கள் பணியகம், மேற்படி அனைத்து பொருளாதார ஒப்பந்தங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.