உள்நாட்டு செய்தி
கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் போயா தினங்களில்,மேலதிக வகுப்புகள் நடத்த தடை!
கிழக்கு மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புகள் நடத்த மாகாண கல்வி அமைச்சு தடை விதித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.மாணவர்கள் மேலதிக வகுப்புகளுக்கு தங்களது முழுக் காலத்தையும் செலவிடுவதனால் மதம் சார்ந்த கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறைவாக உள்ள காரணத்தால்,இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் சட்டத்தரணி எச்.இ.எம்.டபிள்யூ.ஜி.திஸாநாயக்க அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2 மணி வரையிலும் போயா தினங்களில் முழு நாளும் மேலதிக வகுப்புகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனைக் கண்காணிக்க வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உதவியை நாடுமாறும் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, திருகோணமலை வடக்கு, கந்தளாய், அம்பாறை, மஹாஓயா மற்றும் தெஹியத்தகண்டி ஆகிய பிரதேச கல்விப் பணிப்பாளர்களுக்கு குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.