முக்கிய செய்தி
இலங்கைக்கு இரண்டாம் தவணைக் கொடுப்பனவை வழங்க ஊழியர் மட்ட இணக்கப்பாடு
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள கடன் வசதியின் இரண்டாம் தவணைக் கொடுப்பனவை வழங்க ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.இதற்கமைய, 330 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, இரண்டாம் தவணைக் கொடுப்பனவாக இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. அண்மையில், இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் கடன் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வினை மேற்கொண்டனர். இதற்கமைய, கடன் வசதிக்கான திட்டத்தின் முதலாவது மீளாய்வை நிறைவு செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட அதிகாரிகளுக்கும் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர், இந்த இரண்டாம் தவணை கடன் கொடுப்பனவு உறுதி செய்யப்பட்டுள்ளது.எனினும், இரண்டாம் தவணைக் கொடுப்பனவு விடுவிக்கப்படுவது இரண்டு விடயங்களில் தங்கியுள்ளதாக, சர்வதேச நாணய நிதிய இலங்கை தூதுக்குழுவின் பிரதானி Peter Breuer தெரிவித்துள்ளார்.சர்வதேச கடன் வழங்குநர்களுடனான இணக்கப்பாடு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கியுள்ள கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் குறித்த கொடுப்பனவு விடுவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.இதனிடையே, உறுதியான வரவு செலவுத் திட்டம் மற்றும் குறைந்த அளவிலான வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை ஆகியவற்றையே சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச நாணய நிதியம் இன்று முன்னெடுத்த நிகழ்நிலை ஊடக சந்திப்பை மேற்கோள்காட்டி, ரொய்ட்டர்ஸ் சர்வதேச செய்திச் சேவை இதனை தெரிவித்துள்ளது.இதற்கமைய, இந்த ஆண்டில் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 15 வீதமாகக் காணப்படுமென சர்வதேச நாணய நிதியம் கணிப்பிட்டுள்ளதுடன், அடுத்த ஆண்டில் பற்றாக்குறை ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 வீதத்தை விட அதிகமாக, அரசாங்க வருமானம் காணப்படுவதை இலங்கை உறுதி செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை அரசாங்கத்தின் வருமானப் பற்றாக்குறைக்கான இடைவௌி குறைக்கப்படும் பட்சத்தில், எஞ்சியுள்ள இடைவௌியை நிரப்ப விரும்பும் கடன் வழங்குநர்களிடம் இருந்து அதனை பெற்றுக்கொள்ள முடியும் என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.