முக்கிய செய்தி
மருந்தாளர்கள் பற்றாக்குறை : மருந்து விநியோகம் பாரிய நெருக்கடியில்
மருந்தாளர்களுக்கு நிலவும் பற்றாக்குறை காரணமாக சில வைத்தியசாலைகளில் மருந்து விநியோகத்தில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக மருந்தாளர்கள் பலர் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்வது பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.மருந்தாளர் பற்றாக்குறையினால் வெவ்வேறு தரங்களில் சேவையாற்றும் ஊழியர்கள், மருந்து விநியோகத்தை முன்னெடுப்பதாகவும் இந்த நிலைமை தொடர்ந்தால் மருந்து விநியோக முறைமையில் பாரிய அபாயம் ஏற்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பொதுமக்களின் வரிப்பணத்தில் பல்கலைக்கழகங்களில் மருந்தாளருக்கான கற்றல் நடவடிக்கைகளை நிறைவு செய்யும் மாணவர்கள், வெவ்வேறு தொழில்களை தேடிச்செல்கின்றமை கவலைக்குரிய விடயமாகும். அத்துடன், சுகாதார அமைச்சும் மருந்தாளர்களை சேவையில் இணைத்துக்கொள்வதை நிறுத்தியுள்ளமை தற்போதைய நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மருந்தாளர்களுக்கு நிலவும் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்திப்பதற்காக நிதியமைச்சிடம் அனுமதி கோரியுள்ளதாக சுகாதார அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .