முக்கிய செய்தி
இஸ்ரேலில் இருவரைத் தவிர இலங்கையர் எவரும் பாதிக்கப்பட்ட சம்பவம் பதிவாகவில்லை
இஸ்ரேலில் காணாமற்போன இருவரைத் தவிர வேறு எந்த இலங்கையருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட்ட சம்பவம் இதுவரை பதிவாகவில்லை என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பில், இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் காமினி செனரத் யாப்பா இதனை தெரிவித்துள்ளார்.காஸா தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மக்கள் இயல்பாக வாழ்ந்து வருவதாக அங்குள்ள இலங்கை தூதரக தகவல்கள் தெரிவிப்பதாகவும், போரில் பாதிக்கப்படும் இலங்கையர்களுக்கு உதவிகளை உடனடியாக வழங்கத் தேவையான நிதியை வழங்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அதன்படி, 10,000 அமெரிக்க டொலரை அவசர தேவைகளுக்காக வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்காக வணிக விமான சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.தூதரக அறிக்கைகளின் அடிப்படையில், விமான பயணக் கட்டணங்கள் கணிசமாக உயர்வடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.