முக்கிய செய்தி
யாழில் நஞ்சூட்டி கொல்லப்பட்ட 12 வயது சிறுமி : பாட்டி கைது !
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் பாட்டி கொலைக் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுமி பாட்டியினால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டமை தெரியவந்துள்ளதையடுத்து, 53 வயதான ஓய்வு பெற்ற குடும்ப நல உத்தியோகத்தரான அவரை இன்று நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நேற்று முன்தினம் சிறுமியொருவர் சடலமாகவும் மற்றொரு பெண் மயக்கமுற்ற நிலையிலும் மீட்கப்பட்டனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் யாழ் மாவட்ட நீதவான் நேரில் சென்று பார்வையிட்டார்.சிறுமி திருகோணமலையில் தனது தந்தையுடன் வாழ்ந்து வந்துள்ள நிலையில், பாட்டி மற்றும் சிறுமி இருவரும், கடந்த 9ஆம் திகதி அந்த விடுதிக்கு சென்றுள்ளனர்.
உளச்சிக்கலுக்காக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற வந்ததாகவும் விடுதியில் குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.அதன் பின்னர் இருவரும் நீண்ட நேரமாக அறையை விட்டு வெளியே வராத நிலையில் சந்தேகமடைந்த விடுதி நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு அறிவித்தனர்.பொலிஸார் விடுதி அறையின் கதவை உடைத்தபோது சிறுமி உயிரிழந்த நிலையிலும் பாட்டி மயக்கமுற்ற நிலையிலும் காணப்பட்டனர். இதனையடுத்து சிறுமியின் பாட்டி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் நேற்று மாலை கோப்பாய் பொலிஸார் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
சிறுமியின் சடலம் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது ஆபத்தை ஏற்படுத்தும் மருந்து வழங்கப்பட்டு கொல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.இதன்போது விடுதியில் கடிதமொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், தனக்கு கடுமையாக உளச்சிக்கல் உள்ளதாகவும் சாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதாகவும். தான் இறந்த பின்னர் எனது பேத்தி தனிமையில் கஷ்டப்படுவார் என்பதால் இருவரும் சாக எண்ணினோம். எமது மரணத்திற்கு யாரும் பொறுப்பில்லை. எங்கள் சடலங்களை வீட்டுக்கு எடுத்து செல்ல வேண்டாம் வைத்தியசாலை ஊடாகவே அடக்கும் செய்யவும் என அந்த கடிதத்தில் குறித்த பெண் குறிப்பிட்டிருந்தார்.இதற்கமைய அக்கடிதத்தின் அடிப்படையில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.