உள்நாட்டு செய்தி
வெற்றிடங்களை நிரப்ப 4,000 கிராம உத்தியோகத்தர்கள் விரைவில்..!
வெற்றிடமாக உள்ள சுமார் 4,000 கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பணிகள்,
தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து ஆராய பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
நாட்டில் உள்ள 14,022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் டிஜிட்டல் மயமாக்கும் E-GN திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கிராம அளவில் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும் கட்டமைப்பான கிராம உத்தியோகத்தர் பதவிகளில் அதிகளவில் வெற்றிடங்கள் நிலவுகின்ற காரணத்தால்,
மக்களுக்கான நலன்புரி சேவைகள் உட்பட பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் தோன்றியுள்ளன.
குறிப்பிட்ட மாவட்டங்கள், பிரதேசங்கள் மற்றும் நிறுவனங்களில் வெற்றிடங்கள் காணப்படலாம்.
அதே நேரம் இன்னும் சில பிரதேசங்களில் மேலதிகமாக உத்தியோகத்தர்கள் இருக்கலாம். எனவே தரவரிசையைப் பொருட்படுத்தாமல் அரச சேவை சமநிலைப்படுத்தப்பட வேண்டும்.
இப்போது அரசாங்கம், அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதைக் கொள்கை ரீதியில் இடைநிறுத்தி இருந்தாலும், தற்போது வெற்றிடமாக உள்ள சுமார் நான்காயிரம் கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், தற்போது, E-GN வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.