முக்கிய செய்தி
ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கையின் முன்னேற்றங்கள் வெளிப்படுத்தப்படும்: வெளிவிவகார அமைச்சு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.இதன்போது இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் ட்ரக்கினால் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.இதற்கு முன்னதான ஒழுங்கமைப்பு கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (28.08.2023) ஜெனிவாவில் நடைபெறவுள்ளதோடு, இம்முறை ஜெனிவா அமர்வின்போது இலங்கை தொடர்பில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51 கீழ் 1 தீர்மானத்தின் உள்ளடக்கங்களின் நடைமுறையாக்க அடைவு மட்டம் சம்பந்தமான மதிப்பீடும் வெளிப்படுத்தப்படவுள்ளது.இலங்கை அரசாங்கத்தின் முன்னேற்றங்கள் இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் எவ்விதமான விசேட தூதுக்குழுவும் பங்கேற்காது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார்.அத்துடன், உள்நாட்டில் இலங்கை அரசாங்கம் எட்டியுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி சுபாஷினி அருணாதிலக இம்முறை அமர்வு தொடர்பிலான விடயங்களை தலைமையேற்று முன்னெடுக்கவுள்ளதோடு, இலங்கையின் சார்பிலான பதில்களையும் வழங்கவுள்ளார் .அதேவேளை நாட்டில் செயற்படும் இராஜதந்திரிகளிடத்தில் இலங்கையின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.