முக்கிய செய்தி
ரணில் விக்ரமசிங்க நாளை சிங்கப்பூர் நோக்கி விஜயம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை சிங்கப்பூருக்கு பயணமாகவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது சிங்கப்பூர் அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பினரை சந்தித்து ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார்.
சிங்கபூருக்கான விஜயத்தின் போது அந்த நாட்டு ஜனாதிபதி ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியன் லூங் ஆகியோரை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.
இவர்களை தவிர பாதுகாப்பு அமைச்சர் இங் எங் ஹென், நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ ஹை யீன் ஆகியோருடன் ரணில் விக்ரமசிங்க இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது பரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் காபன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான உடன்படிக்கையும் கையெழுத்திடப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சிங்கப்பூர் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்னர் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான மூத்த ஆலோசகர் ருவன் விஜேவர்தன, மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகரான கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க ஆகியோரும் ரணில் விக்ரமசிங்கவுடன் இந்த விஜயத்தில் இணையவுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டில் இல்லாத காலப் பகுதியில் அவரின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், பதில் பாதுகாப்பு அமைச்சராகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கையின் பதில் அமைச்சராகவும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தொழில்நுட்ப பதில் அமைச்சராகவும் சமூக வலுவூட்டலுக்கான இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல், பெண்கள், குழந்தைகள் விவகாரம் மற்றும் சமூக அதிகாரமளித்தல் ஆகியவற்றின் பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.