முக்கிய செய்தி
வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி – வர்த்தமானி அறிவித்தல் வெளியானது !
பொதுப் போக்குவரத்து வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.நிதியமைச்சர் என்ற வகையில் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்துக்கமைய, தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, பொதுப்போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி தடை தளர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுப் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் பேருந்துகள், கொள்கலன் வாகனங்கள், கனரக வாகனங்கள், பால் போக்குவரத்துக்கான பௌசர்கள் உள்ளிட்ட பல வாகனங்களுக்கான இறக்குமதி தடைகளை தளர்த்தி இந்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்படாத பொதுப்போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.