உள்நாட்டு செய்தி
பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இலங்கை சுதந்திரம் பெற்று, இன்றுடன் 73 ஆண்டுகள்
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்று வருகின்றது.
விழாவை முன்னிட்டு சகல சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பெருந்தொற்றுச் சூழலில் சுதந்திர தின விழாவொன்று இடம்பெறும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இதில் தொற்று பரவலைத் தடுப்பதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறினார்.
இம்முறை படைவீரர்கள், பொலிஸார் அடங்கலாக சுமார் ஆறாயிரம் பேர் சுதந்திர தின அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
இவர்கள் கடந்த சில நாட்களாக பயோ-பபல் என்ற உயிரியல் குமிழி பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அமைய ஒத்திகைகளில் ஈடுபட்டார்கள் என்று இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
சுபீட்சமான எதிர்காலம் சௌபாக்கியமான தாய்நாடு’ எனும் தொனிப்பொருளில், சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறுகின்றது.
இன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.