உள்நாட்டு செய்தி
நீர்க்குழாய் தீக்கரை 6 மாணவர்கள் கைது
கேகாலை, அரநாயக்கவில் அசுபினி எல்ல நீர் திட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட நீர் குழாய்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பில் 6 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த நீர்த்திட்டம் திறந்து வைக்கப்பட்டதுடன் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த நீர் குழாய் தீப்பிடித்து எரிந்திருந்தது.
இந்த தீ விபத்து நாசகார செயல் என தெரிவிக்கப்பட்டதையடுத்து அரநாயக்க பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, நீர் குழாயில் தீப்பற்றிய சம்பவம் தொடர்பில் 6 பாடசாலை மாணவர்களிடம் அரநாயக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததாக கேகாலை பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த 6 பாடசாலை மாணவர்களும் அப்பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி பயின்று வருவதாகவும், இவ்வருடம் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் குழுவாகும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
விசாரணைக்கு பின், குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.