முக்கிய செய்தி
கோட்டாவுக்கு மாதாந்தம் 13 இலட்சம் அரசாங்கம் செலவிடுகிறது !
ஓய்வு பெற்ற ஜனாதிபதி என்ற வகையில் கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு மாதாந்தம் 13 இலட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாவை அரசாங்கம் செலவிடுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இலங்கை செய்தித்தளம் ஒன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இந்தத் தகவலைக் கோரியபோதே குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செலவுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.எனவே குறித்த செய்தித்தளத்தின் இந்த தகவல் கோரிக்கையை ஜனாதிபதி செயலகத்தின் தகவல் அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் அதிகாரி, ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளரின் கையொப்பத்துடன் அதற்கு பதில் வழங்கப்பட்டுள்ளது.இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் டிசம்பர் மாதத்திற்கான செலவுகளை வெளியிட்ட தகவல் அதிகாரி, ஓய்வூதியம், எரிபொருள் கொடுப்பனவு மற்றும் செயலாளருக்கான கொடுப்பனவு , தொலைபேசி கட்டணம் போன்றவைக்காக 13 இலட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபா செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.