உள்நாட்டு செய்தி
பாடசாலை புத்தகபைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க நடவடிக்கை.
பாடசாலை புத்தகபைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகவுள்ள நிலையில், பிள்ளைகளுக்கு காலணிகள் மற்றும் பைகளை கொள்வனவு செய்வதில் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (11) நிதியமைச்சில் இடம்பெற்ற பாடசாலைப் பைகள் மற்றும் காலணிகளின் விலை தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது, காலணிகள் மற்றும் பைகள் இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டு, அவற்றின் உள்ளூர் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் உள்ளூர் சந்தையில் பைகள் மற்றும் காலணிகளின் விலையும் குறைய வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தை ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கைத் துறைக்கு அமைச்சு தெரிவித்துள்ளது.
விலை குறையவில்லை என்றால் அது தொடர்பில் ஜனாதிபதிக்கு உடனடியாக அறிவித்து விலையை குறைப்பதற்கு தகுந்த தீர்வு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.