முக்கிய செய்தி
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக செல்வோருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்.
சட்டவிரோதமான முறையில் தொழிலுக்காக நாட்டிலிருந்தும் வெளியேறும் பெண்களை சுரக்ஷா பாதுகாப்பு இல்லங்கள் இனி ஏற்றுக்கொள்ளாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த முடிவு எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.
(SLBFE) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்த பின்னர் வெளிநாட்டுத் தொழிலுக்காக இலங்கையை விட்டு வெளியேறும் பெண்களுக்காக வெளிநாட்டுத் தூதரகங்களின் தொழிலாளர் நலப் பிரிவுகளின் கீழ் சுரக்ஷா பாதுகாப்பு இல்லங்கள் நிறுவப்பட்டுள்ளன.
சட்டப்பூர்வமான தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பான வீடுகள் ஏற்படுத்தப்பட்டாலும், இதுவரை பணியகத்தில் பதிவு செய்யாமல் நாட்டை விட்டு வெளியேறும் பெண்களுக்குத் தேவையான நலன்புரி வசதிகளை வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செயல்பட்டு வருகிறது.
எவ்வாறெனினும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்த பின்னர் நாட்டை விட்டு வெளியேறும் பெண்களுக்கு மட்டுமே இந்த வசதிகள் இருக்கும் என்று பணியகம் அறிவுறுத்தியுள்ளது.