உள்நாட்டு செய்தி
ஒரு குடும்பத்துக்கு மாதம் 10 கிலோ அரிசி
29 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பமானது.
திம்பிரிகசாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெமட்டகொட, நாரஹேன்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இதன்படி, தெமட்டகொட, மிஹிதுசென்புர சனசமூக மண்டபத்தில் 995 பயனாளிகளுக்கும், நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தை சனசமூக மண்டபத்தில் 448 பயனாளிகளுக்கும், வெள்ளவத்தை ரஞ்சன் விஜேரத்னபுர சனசமூக மண்டபத்தில் 169 பயனாளிகளுக்கும் அரிசிப் பொதிகள் வழங்கப்பட்டன.
அரசாங்கத்தின் 2022/2023 பெரும் போக அரிசி கொள்வனவு மற்றும் அரிசி கையிருப்பு அகற்றல் திட்டத்தின் கீழ், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த இலவச அரிசி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்துக்கு மாதம் 10 கிலோ அரிசி என்ற அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.