உள்நாட்டு செய்தி
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் நுாற்றாண்டு விழா இன்று
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் நுாற்றாண்டு விழா இன்று உலமா சபைத் தலைவா் மௌலவி அஷ்ஷேக் எம்.ஜ.றிஸ்வி முப்தியின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.இந்நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகும் கௌரவ அதிதியாக பிரதம மந்திரி தினேஸ் குணவர்த்தனவும், பிரதம பேச்சளராக தென் ஆபிரிக்க உலமா சபை தலைவா் மௌலானா இப்றாஹீம் பாஹ்ம் கலந்து கொள்ளவுள்ளனா்.நுாற்றாண்டை முன்னிட்டு விசேட முத்திரை வெளியிடப்பட இருப்பதோடு முதல் முத்திரையை ஜனாதிபதி வெளியீட்டு வைப்பாா்.அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை இலங்கை நாட்டில் முஸ்லிம்களின் சன்மார்க்கத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கடந்த 1924 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஓர் உயர்ந்த சிவில் அமைப்பாகும்.2000 ஆம் ஆண்டு 51 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில் ஜம்இய்யா கூட்டிணைக்கப்பட்டுள்ளது.நாடளாவிய ரீதியில் 24 மாவட்டங்களிலும் பிரதேசக் கிளைகள் என 164 கிளைகள் உள்ளன.8000 க்கும் மேற்பட்ட ஆலிம்கள் தற்போது ஜம்இய்யாவில் அங்கம் வகிக்கின்றனர்.ஜம்இய்யதுல் உலமாவின் கீழ் இயங்கும் கல்விப்பிரிவு, சமூக சேவைப் பிரிவு மற்றும் பத்வா பிரிவு போன்ற பல்வேறுபட்ட உப பிரிவுகள் மூலம் முஸ்லிம் சமூகம் எண்ணிலடங்காத சேவைகளை செய்து வருகின்றது.ஜம்இய்யாவின் தேசிய அளவிலான சமூக வேலைத்திட்டங்கள் மூலம் இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் உட்பட முஸ்லிமல்லாதவர்களும் பயனடைந்து வந்திருக்கிறார்கள்.குறிப்பாக முஸ்லிம்களுக்கு மத்தியில் ஐக்கியத்தையும் முஸ்லிமும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத்தியில் சகவாழ்வையும் கட்டியெழுப்பும் முயற்சியில் ஜம்இய்யா இந்த நாட்டில் செய்து வருகின்றது.இவ் அமைப்பு சுயதீனமாக இயங்கும் ஒர் அமைப்பாகும். கட்சி, அரசியல் இன,மத பிரதேச வேறுபாடின்றி ஆன்மீகத்துறையில் தனது செயற்பாட்டினை செயற்படுத்தி வருகின்றது.