உள்நாட்டு செய்தி
இலங்கைக்குள் சிறுவராக இருக்க வேண்டிய ஒருவரின் வயதெல்லையை 16 இல் இருந்து 18 ஆக உயர்த்த வேண்டும்…
பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் கலந்துரையாடல் இலங்கைக்குள் சிறுவராக இருக்க வேண்டிய ஒருவரின் வயதெல்லையை 16 இல் இருந்து 18 ஆக உயர்த்தப்பட வேண்டும் என, சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண் – பெண் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே தலைமையில் அண்மையில் கூடியபோது (22) இதுபற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதற்கமைய “சிறுவர் மற்றும் இளம் ஆட்கள் கட்டளைச் சட்டம்” என்ற பதத்துக்குப் பதிலாக “சிறுவர் கட்டளைச் சட்டம்” என்றும், “சிறுவர் மற்றும் இளம் ஆட்கள்” என்ற வசனத்துக்குப் பதிலாக “சிறுவர்” என்ற பதத்தைத் திருத்துவதற்கும் இதன் ஊடாக முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன், முதன்மைச் சட்டவாக்கத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஏதேனும் ஒழுங்குவிதியில் அல்லது விதியில் அல்லது முதன்மைச் சட்டவாக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட அறிவிப்பில், அறிவித்தலில், ஒப்பந்தத்தில், தொடர்பாடலில் அல்லது வேறு ஆவணத்தில் “சிறுவர்கள்” எனக் குறிப்பிடப்படும் அனைத்து இடங்களிலும் அந்த வசனம் நீக்கப்பட வேண்டும் என இதன் ஊடாக முன்மொழியப்பட்டுள்ளது.
முதன்மைச் சட்டத்தின் 71 பிரிவின் (6) உபபிரிவில் உள்ள ‘இந்த வயதுப் பிரிவில் உள்ள எந்தவொரு சிறுவர் அல்லது இளம் ஆட்களுக்குத் தண்டனை வழங்கும்போது எந்தவொரு பெற்றோர், ஆசிரியர் அல்லது உத்தியோகபூர்வ பாதுகாவலருக்குக் காணப்படும் உரிமையைப் பாதிக்கும் வகையில் அமையக் கூடாது’ என்ற திருத்தம் இத்திருத்தச் சட்டமூலகத்தின் ஊடாக நீக்கப்பட்டுள்ளது.
23வது அத்தியாயமான சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் கட்டளைச் சட்டத்தின் நோக்கமானது சிறுவர்களின் மற்றும் இளம் ஆட்களின் பாதுகாப்புக்காக சிறுவர் குற்றவாளிகளைக் கண்காணிக்க சிறுவர்களுக்கான நீதிமன்றத்தை நிறுவுவதற்கான உத்தரவுகளை உருவாக்குவதாகும்.
2022.07.18ஆம் திகதி வெளியிடப்பட்ட சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் (திருத்தம்) சட்டமூலத்துக்கு அமைய 23வது அத்தியாயம் திருத்தப்படவிருப்பதுடன், நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்படும் தினத்திலிருந்து இத்திருத்தங்கள் நடைமுறைக்கு வரும்.